Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 229

அறத்துப்பால்இல்லறவியல்23. ஈகை

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

irattalin innAtu manRa nirappiyatAmE tamiya ruNal

Shivaranjani R

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் செல்வத்தைக் காத்து மேலும் சேர்க்க வேண்டும் என்ற பேராசையால், எளியவருக்கு ஒரு வாய் உணவும் பகிர்ந்தளிக்காமல் தானே தனியாக அமர்ந்து உண்பது, பிறரிடம் கையேந்திப் பிச்சை எடுப்பதைக் காட்டிலும் இழிவானதும் கொடிய துன்பமும் ஆகும்.

• நிரப்பிய = தன் செல்வப் பெட்டகத்தை மேலும் நிரப்ப வேண்டும் என்ற ஆசையால்• தாமே தமியர் உணல் = எவருக்கும் ஒரு வாய் உணவும் கொடுக்காமல் தானே தனித்து அமர்ந்து உண்பது,• இரத்தலின் = பிறரிடம் கையேந்தி யாசிப்பதைக் காட்டிலும்• இன்னாது மன்ற = நிச்சயமாக மிகக் கொடியதும் துன்பமானதுமாகும்.

மு.வரதராசன்

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

பரிமேலழகர்

நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

Meaning in English

They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout