Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 228

அறத்துப்பால்இல்லறவியல்23. ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.

Ittuvakkum inpam aRiyArkol tAmuTaimaivaittizhakkum vanka Navar

Kanesha Balakumaran

பொருள் / உரை

முருகா எளிய உரை

இல்லாதவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய மகிழ்ச்சியைக் கண்டு தாமும் மகிழும் பேரின்பத்தை, இரக்கமில்லாமல் செல்வத்தைப் பூட்டி வைத்துப் பிறகு அதை இழந்துபோகும் கஞ்சர்கள் அறிய மாட்டார்களோ?

• ஈத்து உவக்கும் இன்பம் = எளியோருக்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதைக் கண்டு தானும் அடையும் பேரின்பத்தை• அறியார்கொல் = அறிந்து அனுபவிக்க மாட்டார்களோ?• தாம் உடைமை = தம்மிடமுள்ள செல்வத்தைப் பிறருக்குக் கொடாமல்• வைத்து இழக்கும் = பூட்டிப் பாதுகாத்து இறுதியில் இழந்து போகும்• வன்கணவர் = இரக்கமற்ற கொடிய உள்ளம் கொண்ட மனிதர்கள்.

மு.வரதராசன்

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

பரிமேலழகர்

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்துப் பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்சியை அறியார்களோ?

Meaning in English

Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout