ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.
ARRuvA rARRal pasiyARRal appasiyaimARRuvA rARRaliR pin
B. Janushika
பொருள் / உரை
முருகா எளிய உரை
தவ வலிமை உடையவர்கள் தங்கள் பசியைப் பொறுத்துக் கொள்வது பெரிய ஆற்றல்தான்; ஆனால், பசியால் வாடும் பிறருக்கு உணவளித்துப் பசிப்பிணியைப் போக்கும் வள்ளல்களின் ஈகை ஆற்றலுக்கு முன்னால் அது இரண்டாவது இடத்தையே பெறும்.
• ஆற்றுவார் ஆற்றல் = தவம் செய்பவர்களின் வலிமையானது• பசி ஆற்றல் = தமக்கு வரும் பசித் துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதாகும்;• அப்பசியை = ஆனால் அத்தகைய கொடிய பசித்துன்பத்தைப்• மாற்றுவார் ஆற்றலின் பின் = மற்றவர்களுக்கு உணவிட்டுப் போக்குபவர்களின் ஆற்றலுக்குப் பின்னரே அது நிற்கும்.
மு.வரதராசன்
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
பரிமேலழகர்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)
சாலமன் பாப்பையா
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.
Meaning in English
'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain





