Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 224

அறத்துப்பால்இல்லறவியல்23. ஈகை

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.

innA tirakkap paTutal irantavarinmukang kANu maLavu

Rishabh Karthik

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மிடம் ஒருவர் கையேந்தி நிற்கும் துயரத்தைக் காண்பது கொடுப்பவருக்கும் மிகுந்த வேதனையைத் தரும்; ஆனால், கேட்ட உதவியைப் பெற்று அந்த ஏழையின் முகம் மலர்ந்து புன்னகைக்கும் கணத்தில் அந்த வேதனை மறைந்து ஈகையின் பேரின்பம் உண்டாகும்.

• இரக்கப்படுதல் = உதவி கேட்டு வருபவரின் துன்பத்தைக் காண்பது• இன்னாது = கொடுப்பவர்க்கும் மனவேதனையளிப்பதாகும்;• இரந்தவர் = ஆனால் உதவி பெற்ற அந்த எளியவரின்• இன்முகம் = மகிழ்ச்சி நிறைந்த இன்முகத்தைக்• காணும் அளவு = காணும் வரை மட்டுமே அந்த வேதனை இருக்கும் (அவர் முகம் மலர்ந்ததும் பேரின்பமாகும்).

மு.வரதராசன்

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

பரிமேலழகர்

இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

Meaning in English

The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout