நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.
nallA Reninung koLaltItu mElulakamilleninum ItalE nanRu
Hrithik Jayakish
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறரிடம் கையேந்திப் பெறுவது புண்ணிய வழி என்று சொன்னாலும் அது இழிவானதே; பிறருக்குக் கொடுப்பதால் சொர்க்கம் கிடைக்காது என்ற நிலை வந்தாலும் கூட, ஏழைகளுக்குக் கொடுத்து உதவுவதே ஒரு மனிதன் செய்யக்கூடிய மிக உயர்ந்த செயலாகும்.
• கொளல் = பிறரிடம் யாசித்து வாங்குவது• நல் ஆறு எனினும் = நல்ல வழி என்று ஒருவேளை சொல்லப்பட்டாலும்• தீது = அது இழிவானதும் தீமையானதுமாகும்;• மேல் உலகம் இல் எனினும் = ஈகை செய்வதால் மறுமையில் சொர்க்கம் கிடைக்காது என்றாலும்• ஈதலே நன்று = ஏழை எளியோருக்குக் கொடுப்பதே மனித வாழ்வின் மிகச் சிறந்த நன்மையாகும்.
மு.வரதராசன்
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
பரிமேலழகர்
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)
சாலமன் பாப்பையா
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
Meaning in English
Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still





