வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.
vaRiyArkkon RIvatE IkaimaR RellAngkuRiyetirppai nIra tuTaittu
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
எந்த வசதியும் இல்லாத ஏழைகளுக்கு அவர்கள் தேவை அறிந்து கொடுப்பதே உண்மையான ஈகை ஆகும்; வசதியுள்ளவர்களுக்கோ அல்லது பிரதிபலன் எதிர்பார்த்தோ கொடுப்பதெல்லாம் ஒருவிதக் கடன் பரிமாற்றமே தவிர உண்மையான ஈகை ஆகாது.
• வறியார்க்கு = ஏதுமில்லாத வறியவர்களுக்கு• ஒன்று ஈவதே = தேவையான ஒரு பொருளைக் கொடுப்பதே• ஈகை = உண்மையான ஈகைத் தர்மமாகும்;• மற்று எல்லாம் = அதுவல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுப்பதெல்லாம்• குறியெதிர்ப்பை = கொடுத்ததைத் திரும்பப் பெறும் கடன் போன்ற• நீரது உடைத்து = பயன் எதிர்பார்க்கும் தன்மையுடையதாகும்.
மு.வரதராசன்
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
பரிமேலழகர்
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
Meaning in English
Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense





