Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 208

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடியுறைந் தற்று.

tIyavai seytAr keTutal nizhaltannaivIyA taTiyuRain taRRu

Sai Gayathri Ummathyala

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவன் எங்கு சென்றாலும் அவனது நிழல் அவனை விட்டு விலகாமல் அவனது காலடியிலேயே தங்கியிருப்பது போல, பிறருக்குத் தீமை செய்தவனை அவன் செய்த பாவமும் தீமையும் ஒருபோதும் விட்டு விலகாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.

• தீயவை செய்தார் கெடுதல் = பிறருக்குத் தீமை செய்தவர் அழிந்து போவது,• நிழல் = ஒருவனுடைய உடலின் நிழலானது• தன்னை வீயாது = அவனை விட்டு விலகிப் போகாமல்• அடி உறைந்தற்று = அவனது காலடியிலேயே எப்போதும் தங்கியிருப்பதைப் போன்றது.

மு.வரதராசன்

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

பரிமேலழகர்

தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் 'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

சாலமன் பாப்பையா

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

Meaning in English

Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout