Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 205

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.

ilanenRu tIyavai seyyaRka seyyinilanAkum maRRup peyarttu

Komalaa Ravi

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நான் ஏழையாக இருக்கிறேன், எனக்கு வேறு வழியில்லை' என்று காரணம் கூறி எவரும் தவறான அல்லது தீய செயல்களில் ஈடுபடக் கூடாது; அப்படிச் செய்தால், அந்தப் பாவத்தால் அவன் மேலும் மேலும் வறுமையிலும் துன்பத்திலும் தான் வீழ்வான்.

• இலன் என்று = 'நான் ஏழை / வறியவன்' என்று காரணம் காட்டி• தீயவை செய்யற்க = பிறருக்குத் தீய வழிகளில் கெடுதல் செய்யக் கூடாது• செய்யின் = அப்படித் தீமை செய்வானானால்• மற்றும் பெயர்த்து = மேலும் மீண்டும்• இலன் ஆகும் = அவன் பொருளும் நன்மையும் அற்ற கொடிய ஏழையாகவே ஆவான்

மு.வரதராசன்

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

பரிமேலழகர்

இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

சாலமன் பாப்பையா

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

Meaning in English

Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout