அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
aRivinu LellAn talaiyenpa tIyaseRuvArkkunj seyyA viTal
Asha Muralidharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
தமக்குத் துன்பமும் தீமையும் விளைவிப்பவர்க்கும் கூட, பதிலுக்குத் தீமை செய்யாமல் தவிர்ப்பதே அறிவுடைமை அனைத்திலும் மிகச் சிறந்த தலையாய அறிவாகும்.
• அறிவினுள் எல்லாம் = மனித அறிவுகள் எல்லாவற்றிலும்• தலை என்ப = முதன்மையானது / மிக உயர்ந்தது என்று அறிஞர் கூறுவர்• தீய = தீமைகளை / துன்பங்களை• செறுவார்க்கும் = தனக்குத் துன்பம் செய்து வருத்துபவர்க்கும்• செய்யா விடல் = திருப்பிச் செய்யாமல் தவிர்த்துவிடுதல்.
மு.வரதராசன்
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
பரிமேலழகர்
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
Meaning in English
Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil





