பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.
payanilsol pArATTu vAnai makanenalmakkaT pataTi yenal
Safeena S
பொருள் / உரை
முருகா எளிய உரை
பயனற்ற வீண் வார்த்தைகளையே எப்போதும் விரும்பிப் பேசுபவனை மனிதன் என்று மதிக்கக் கூடாது; உள்ளே அரிசி இல்லாத வெற்றுப் பதர் போன்றவன் என்றே கருத வேண்டும்.
• பயனில் சொல் = நற்பயனற்ற வெற்றுச் சொற்களையே• பாராட்டுவானை = விரும்பிப் பலமுறை பேசுகின்றவனை,• மகன் எனல் = ஒரு மனிதன் என்று சொல்லாதீர்கள்;• மக்கட் பதடி எனல் = மனிதர்களுள் வெறும் 'பதர்' என்றே சொல்லுங்கள்.
மு.வரதராசன்
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
பரிமேலழகர்
பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
Meaning in English
Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity





