Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 19

அறத்துப்பால்பாயிரவியல்2. வான்சிறப்பு

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.

tAnam tavamiraNTum tangkA viyanulakamvAnam vazhangkA tenin

திருக்குறள் 19: முருகா பாடல்

1 / 2

0:000:00

பொருள் / உரை

முருகா எளிய உரை

வானம் உலகிற்கு வழங்காது என்றால்!வனமும் வயலும் நனையாது என்றால்!தானம் கொடுக்கும் குணமும் நிலைக்காது!மனம் அடக்கும் தவமும் நிலைக்காது!

• வானம் வழங்காது எனின் = வானத்திலிருந்து மழை பெய்து உலகிற்கு உதவாமல் போனால்,• வியன் உலகம் = இந்த அகன்ற பெரிய உலகத்தில்,• தானம் = பிறருக்கு உணவும் பொருளும் வழங்கும் தான தர்மங்களும்,• தவம் இரண்டும் = தன்னடக்கத்தோடு மேற்கொள்ளும் ஆன்மீகத் தவமும் ஆகிய இரண்டும்• தங்கா = நிலைத்து நிற்க முடியாமல் அழிந்துவிடும்.

மு.வரதராசன்

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

பரிமேலழகர்

வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)

சாலமன் பாப்பையா

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

Meaning in English

If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout