Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 189

அறத்துப்பால்இல்லறவியல்19. புறங்கூறாமை

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.

aRanOkki yARRungkol vaiyam puRanOkkippunso luraippAn poRai

Varshan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• புறன்நோக்கி = பிறர் இல்லாத சமயம் பார்த்து• புன்சொல் உரைப்பான் = இழிவான புறம்பேச்சை உரைப்பவனது• பொறை = உடல் பாரத்தை,• வையம் = இந்த பூமி• அறன்நோக்கி ஆற்றுங்கொல் = 'இவனையும் சுமப்பதே என் தர்மம்' என்று கருதிப் பொறுத்துச் சுமக்கின்றதோ?எளிய விளக்கம்:ஒருவர் இல்லாத நேரத்தைப் பார்த்து அவரைப் பற்றி இழிவாகப் புறம்பேசுகின்ற கொடியவனின் உடல் பாரத்தை, 'இவனையும் பொறுத்துச் சுமப்பதே என் கடமை' என்ற அறநெறியைக் கருதித்தான் இந்த பூமிதேவி சுமக்கின்றாளோ!

மு.வரதராசன்

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

பரிமேலழகர்

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

Meaning in English

'Tis charity, I ween, that makes the earth sustain their load Who, neighbours' absence watching, tales or slander tell abroad

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout