அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.
aRanazhIi yallavai seytalin tItEpuRanazhIip poyttu nakai
Bellie Uncle
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றிப் புறம்பேசிவிட்டு, அவர் நேரில் வந்தபோது பொய்யாகச் சிரித்துப் பேசுவது, அறநெறியை அடியோடு மறுத்துப் பகிரங்கமாகப் பாவங்களைச் செய்வதை விடவும் மிகக் கொடிய தீமையாகும்.
• புறன் அழீஇ = ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துப் புறம்பேசி,• பொய்த்து நகை = நேரில் காணும்போது பொய்யாகச் சிரிப்பது,• அறன் அழீஇ = 'அறமே இல்லை' என்று அழித்துப் பேசி• அல்லவை செய்தலின் = பாவச் செயல்களைச் செய்வதை விடவும்• தீதே = மிகக் கொடிய தீமையாகும்.
மு.வரதராசன்
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
பரிமேலழகர்
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)
சாலமன் பாப்பையா
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
Meaning in English
Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile





