அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
aஃkAmai selvattiR kiyAtenin veஃkAmaivENTum piRankaip poruL
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனுடைய சொந்தச் செல்வம் அழியாமல் குறைந்து போகாமல் நிலைத்து நிற்க வழி எதுவென்றால், அடுத்தவனின் கையில் இருக்கும் உடைமைகளைத் தான் பேராசையோடு விரும்பாமல் இருப்பதே ஆகும்.
• செல்வத்திற்கு = ஒருவனது சொந்தச் செல்வத்திற்குக்• அஃகாமை யாதெனின் = குறைவு நேராமல் இருப்பதற்கான வழி எதுவென்றால்,• பிறன்கைப் பொருள் = அடுத்தவனின் கையில் இருக்கும் பொருளை• வெஃகாமை வேண்டும் = தான் ஆசைப்படாமல் இருப்பதே ஆகும்.
மு.வரதராசன்
ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
பரிமேலழகர்
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)
சாலமன் பாப்பையா
செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.
Meaning in English
What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine





