அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.
aruLveஃki yARRinkaN ninRAn poruLveஃkippollAta sUzhak keTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
இறையருளை விரும்பி நல்லற வழியில் நிலைத்து நின்ற ஒருவன் கூட, பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுத் தீய வழிகளை மனதில் நினைத்தாலே போதும், அவன் முற்றிலும் அழிந்து போவான்.
• அருள்வெஃகி = இறையருளை விரும்பி• ஆற்றின்கண் நின்றான் = அறவழியில் நின்றவனும்,• பொருள்வெஃகி = பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப்• பொல்லாத சூழ = பொல்லாத தீய செயல்களை எண்ணினாலே• கெடும் = அடியோடு அழிந்து போவான்.
மு.வரதராசன்
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
பரிமேலழகர்
அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
Meaning in English
Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong





