நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.
naTuvinRi nanporuL veஃkiR kuTiponRikkuRRamum AngkE tarum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
நீதி நேர்மை இல்லாமல் பிறருக்குரிய நல்ல பொருளைக் கவர ஆசைப்பட்டால், அந்தப் பேராசை அவனது குடும்பத்தையே அடியோடு அழித்து, பல குற்றப் பழிகளையும் உடனே கொண்டுவந்து சேர்க்கும்.
• நடுவின்றி = நியாயமில்லாமல் (நடுவுநிலைமை இன்றி)• நன்பொருள் வெஃகின் = பிறர்க்குரிய நல்ல பொருளைக் கவர விரும்பினால்,• குடிபொன்றி = அவனது குடும்பம் அழிந்து,• குற்றமும் = பல குற்றப் பழிகளும்• ஆங்கே தரும் = அப்பொழுதே வந்து சேரும்.
மு.வரதராசன்
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
பரிமேலழகர்
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார்,'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)
சாலமன் பாப்பையா
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
Meaning in English
With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door





