அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.
avviya nenjsattAn Akkamum sevviyAnkETum ninaikkap paTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொறாமை பிடித்தவனின் செல்வ வளர்ச்சியும், நேர்மையான நல்லவனின் வறுமையும் உலகில் காணப்பட்டால், அது அறிஞர்களால் வியப்போடு ஆராய்ந்து பார்க்கத்தக்க விந்தையாகும்.
• அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் = பொறாமை கொண்ட நெஞ்சமுடையவனின் செல்வப் பெருக்கும்,• செவ்வியான் கேடும் = நேர்மையான நல்லவனின் வறுமையும்• நினைக்கப்படும் = உலகத்தாரால் ஆச்சரியத்தோடு ஆராய்ந்து பார்க்கப்படும்.
மு.வரதராசன்
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை
பரிமேலழகர்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் - கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும் - ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும். (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்' 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக்கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)
சாலமன் பாப்பையா
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க
Meaning in English
To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ





