அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
azhukkA Renavoru pAvi tirusseRRuttIyuzhi uyttu viTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒப்பற்ற கொடிய பாவியானவன், தன்னைக் கொண்டிருப்பவனின் செல்வத்தை முற்றிலும் அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவனைக் கொடிய நரகத் துன்பத்திலும் தள்ளிவிடுவான்.
• அழுக்காறு என ஒரு பாவி = பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி,• திருச்செற்று = (தன்னை உடையவனின்) செல்வத்தை அழித்து,• தீயுழி = நரகத் துன்பத்தில் (தீய வழியில்)• உய்த்து விடும் = அவனைத் தள்ளிவிடும்.
மு.வரதராசன்
பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.
பரிமேலழகர்
அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்
Meaning in English
Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery pain





