அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.
avvit tazhukkA RuTaiyAnais seyyavaLtavvaiyaik kATTi viTum
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறர் உயர்வைக் கண்டு பொறாமைப்படுபவனைக் கண்டு செல்வத் திருமகள் வெறுப்படைந்து, அவனுக்குத் தன் மூத்தவளான மூதேவியை (வறுமையை) அடையாளம் காட்டிவிட்டு அவனை விட்டு விலகிப் போய்விடுவாள்.
• அழுக்காறு உடையானை = பிறரைக் கண்டு பொறாமைப்படுபவனை,• செய்யவள் = செல்வத் திருமகள் (இலக்குமி)• அவ்வித்து = தானும் வெறுத்து விலகி,• தவ்வையைக் காட்டி விடும் = தன் மூத்த தமக்கையான மூதேவிக்கு (வறுமைக்கு) அவனைக் காட்டிவிட்டுச் சென்றுவிடுவாள்.
மு.வரதராசன்
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
பரிமேலழகர்
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
Meaning in English
From envious man good fortune's goddess turns away, Grudging him good, and points him out misfortune's prey





