ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு.
ozhukkARAk koLka oruvantan nenjsattazhukkA RilAta iyalpu
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் மனதில் பிறரைக் கண்டு பொறாமைப்படாமல் வாழ்கின்ற தூய இயல்பினை, ஒருவன் தனக்குரிய தலையாய நல்லொழுக்க நெறியாகக் கொண்டு போற்றி வாழ வேண்டும்.
• ஒருவன் தன் நெஞ்சத்து = ஒருவன் தன் உள்ளத்தில்• அழுக்காறு இலாத இயல்பு = பொறாமை இல்லாத நற்குணத்தை,• ஒழுக்காறாக் கொள்க = தனக்குரிய முதன்மையான நல்லொழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
மு.வரதராசன்
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
பரிமேலழகர்
ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]
சாலமன் பாப்பையா
உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
Meaning in English
As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind





