ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
oRuttArk korunALai inpam poRuttArkkupponRun tuNaiyum pukazh
Keshav Harish
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• ஒறுத்தார்க்கு = தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்கு• ஒருநாளை இன்பம் = அந்த ஒரு நாளுக்கான தற்காலிக இன்பமே உண்டாகும்;• பொறுத்தார்க்கு = அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவர்க்கோ• பொன்றுந் துணையும் = உலகம் அழியும் வரையிலும்• புகழ் = அழியாத நற்புகழ் நிலைத்து நிற்கும்.எளிய விளக்கம்:தமக்குத் தீங்கு செய்தவரைப் பழிவாங்கித் தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் மட்டுமே தற்காலிக இன்பம் கிடைக்கும்; ஆனால் அத்தீங்கைப் பொறுத்துக் கொண்டவருக்கோ உலகம் அழியும் வரையிலும் நிலைத்து நிற்கும் அழியாத புகழ் உண்டாகும்.
மு.வரதராசன்
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
பரிமேலழகர்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]
சாலமன் பாப்பையா
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
Meaning in English
Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away





