பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
piRanmanai nOkkAta pErANmai sAnROrkkaRanenRO AnRa vozhukku
Mr Motivation
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிறன் மனைவியைக் காமக் கண்ணால் நோக்காமல் புலன்களை அடக்கி ஆளும் பெருங்குணம் என்பது சான்றோர்களுக்குச் சிறந்த அறநெறி மட்டுமல்லாமல், ஒழுக்கத்தின் சிகரமாகவும் திகழ்கிறது.
• பிறன்மனை நோக்காத = பிறன் மனைவியைக் காமத்தோடு நோக்காத• பேராண்மை = சிறந்த வீரமானது (புலனடக்கம்),• சான்றோர்க்கு = சான்றோர்களுக்கு• அறன் ஒன்றோ = வெறும் தர்மம் மட்டுமே அன்று;• ஆன்ற ஒழுக்கு = மிக உயர்ந்த முழுமையான நல்லொழுக்கமுமாகும்.
மு.வரதராசன்
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பரிமேலழகர்
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம். (புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்
Meaning in English
Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life





