எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
eLitena illiRappA neytumenj njAnRumviLiyAtu niRkum pazhi
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
'யாருக்கும் தெரியாது, செய்வது எளிது' என்று எண்ணிப் பிறன் மனைவியிடம் எல்லை மீறி நடப்பவன், காலமெல்லாம் சாகாமல் அவனது வம்சத்திற்கே நிலைத்து நிற்கும் தீராத பழியை அடைவான்.
• எளிதென = 'செய்வது சுலபம்' என்று எண்ணி• இல்லிறப்பான் = பிறன் மனைவியிடம் வரம்பு மீறிச் செல்பவன்,• எஞ்ஞான்றும் = எக்காலத்திலும்• விளியாது நிற்கும் = அழியாமல் நிலைத்து நிற்கும்• பழி எய்தும் = பெரும் பழியை அடைவான்.
மு.வரதராசன்
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்
பரிமேலழகர்
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.)
சாலமன் பாப்பையா
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
Meaning in English
'Mere triflel' saying thus, invades the home, so he ensures A gain of guilt that deathless aye endures





