விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.
viLintArin vERallar manRa teLintAriltImai purintozhuku vAr
Thirukkural
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னை ஐயப்படாமல் முழுமையாக நம்பியவரின் வீட்டிற்குள் சென்று, அவரது மனைவியிடம் தகாத முறையில் தீமை செய்து வாழ்கின்றவன், உயிரோடு நடமாடினாலும் உண்மையில் அவன் செத்துப் போன பிணமே ஆவான்.
• தெளிந்தார் இல் = தன்னை முழுமையாக நம்பியவரின் வீட்டில்• தீமை புரிந்து ஒழுகுவார் = (அவரது மனைவியிடம்) தகாத தீமை செய்து வாழ்பவர்,• விளிந்தாரின் = செத்துப்போன பிணத்தை விட• வேறு அல்லர் = வேறுபட்டவர் அல்லர் (பிணமே ஆவர்);• மன்ற = இது நிச்சயம்.
மு.வரதராசன்
ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
பரிமேலழகர்
தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் - தம்மை ஐயுறாதார் இல்லாள் கண்ணே பாவஞ்செய்தலை விரும்பி ஒழுகுவார், விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- உயிருடையவரேனும் இறந்தாரே ஆவர். (அறம் பொருள் இன்பங்கள் ஆகிய பயன் உயிர் எய்தாமையின், 'விளிந்தாரின் வேறல்லர்', என்றும், அவர் தீமை புரிந்து ஒழுகுவது இல்லுடையவரது தெளிவு பற்றியாகலின், 'தெளிந்தார் இல்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா
தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்
Meaning in English
They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise





