Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 140

அறத்துப்பால்இல்லறவியல்14. ஒழுக்கமுடைமை

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்.

ulakattO ToTTa ozhukal palakaRRungkallA raRivilA tAr

K. Likhith

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகத்து உயர்ந்த சான்றோர்களோடு பொருந்தி வாழும் நல் ஒழுக்கத்தைக் கற்காதவர்கள், எத்தனை நூல்களைக் கற்றறிந்த போதிலும் அவர்கள் உண்மையில் எதையும் கல்லாத அறிவில்லாத மூடர்களே ஆவர்.

• உலகத்தோடு = உலகத்து உயர்ந்த சான்றோர்களோடு• ஒட்ட ஒழுகல் = பொருந்தி வாழும் நல் ஒழுக்க முறையை• கல்லார் = கற்காதவர்கள்,• பல கற்றும் = பல நூல்களைக் கற்றிருந்தாலும்• அறிவிலாதார் = எதையும் கல்லாத அறிவில்லாதவர்களே ஆவர்.

மு.வரதராசன்

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

பரிமேலழகர்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார். (உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார்.ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

சாலமன் பாப்பையா

முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழக் கல்லாதவர், பல்வேறு நூல்களைக் கற்றவரே என்றாலும் அறிவில்லாதவரே.

Meaning in English

Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout