Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1325

இன்பத்துப்பால்கற்பியல்133. ஊடலுவகை

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.

tavaRilar Ayinum tAmvIzhvAr menROLakaRalin Angkon RuTaittu

M. Kavivarman

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆண்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்களாக இருந்தாலும், காதலியின் செல்லமான ஊடலினால் அவளது மெல்லிய தோள்களைத் தழுவ முடியாமல் பிரிந்திருக்கும் அந்த இடைவெளியிலும் ஓர் அரிய இன்பம் உண்டு!

• தவறு இலர் ஆயினும் = ஆடவர்கள் தம்மிடம் எந்தக் குற்றமும் இல்லாதவர்களாக இருந்தாலும்;• தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் = தாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோள்களை ஊடலால் கூடப் பெறாமல் விலகியிருப்பதிலும்;• ஆங்கு ஒன்று உடைத்து = சொல்ல முடியாத ஓர் இனிய இன்பம் உண்டு!

மு.வரதராசன்

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

பரிமேலழகர்

(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

Meaning in English

Though free from fault, from loved one's tender arms To be estranged a while hath its own special charms

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout