Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1318

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்எம்மை மறைத்திரோ என்று.

tummus seRuppa azhutAL numaruLLalemmai maRaittirO enRu

RANDOM VIEWS

பொருள் / உரை

முருகா எளிய உரை

அவளது ஊடலுக்குப் பயந்து வந்த தும்மலை நான் அடக்கிக் கொள்ள, 'உமக்கு விருப்பமான பிற பெண்கள் உம்மை நினைப்பதை எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறீரோ?' என்று சொல்லி அவள் அழுது ஊடினாள்!

• தும்முச் செறுப்ப = அவளது ஊடலுக்கு அஞ்சி வந்த தும்மலை நான் அடக்கிக் கொள்ள;• நுமர் உள்ளல் = 'உமக்கு விருப்பமானவர்கள் உம்மை நினைப்பதை;• எம்மை மறைத்திரோ என்று அழுதாள் = எனக்குத் தெரியாமல் மறைக்கப் பார்க்கிறீரோ?' என்று சொல்லி அழுதாள்!

மு.வரதராசன்

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தும்முச் செறுப்ப - எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் - நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். ('தும்மு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது 'நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை' என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் 'காகு' என்ப. 'தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.

Meaning in English

And so next time I checked my sneeze; She forthwith wept and cried, (That woman difficult to please), 'Your thoughts from me you hide'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout