வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.
vazhuttinAL tumminEn Aka azhittazhutALyAruLLit tumminIr enRu
Sam Vishal
பொருள் / உரை
முருகா எளிய உரை
நான் தும்மிய போது அவள் வழக்கம்போல 'நீடு வாழ்க' என்று வாழ்த்தினாள்; ஆனால் அடுத்த கணமே அந்த வாழ்த்தை மாற்றி, 'உம்மை நினைத்த எந்தப் பெண்ணை எண்ணி நீர் இப்போது தும்மினீர்?' என்று சொல்லி ஊடல் கொண்டு அழுதாள்!
• தும்மினேன் ஆக வழுத்தினாள் = நான் தும்மிய போது அவள் இயல்பாக 'நீடு வாழ்க' என்று வாழ்த்தினாள்;• அழித்து = ஆனால் அடுத்த கணமே அந்த வாழ்த்தை மாற்றி;• யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் = 'உம்மை நினைத்த எந்தப் பெண்ணை எண்ணி நீர் இப்போது தும்மினீர்?' என்று சொல்லி ஊடி அழுதாள்!
மு.வரதராசன்
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
பரிமேலழகர்
(இதுவும் அது.) தும்மினேனாக வழுத்தினாள் - கூடியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்? என்று சொல்லிப் புலந்தழுதாள். (வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான். அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இல்வழக்கை உள்வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.
Meaning in English
She hailed me when I sneezed one day; But straight with anger seized, She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'





