உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.
uLLinEn enREnmaR RenmaRantIr enRennaippullAL pulattak kanaL
Abhilash Venkitachalam
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிரிந்திருந்த காலத்தில் 'உன்னைத்தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன்' என்று சொன்னேன்; 'அப்படியானால் என்னை இடையில் மறந்திருந்ததனால்தானே நினைத்தீர்? என்னை ஏன் மறந்தீர்?' என்று கேட்டு என்னைத் தழுவாமல் ஊடல் கொண்டாள்!
• உள்ளினேன் என்றேன் = பிரிந்திருந்த காலத்தில் 'உன்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன்' என்று சொன்னேன்;• மற்று என் மறந்தீர் என்று = 'அப்படியானால் இடையில் என்னை மறந்ததனால்தானே இப்போது நினைத்தீர்? ஏன் மறந்தீர்?' என்று கேட்டு;• என்னைப் புல்லாள் புலத்தக்கனள் = என்னைத் தழுவாமல் சினந்து ஊடினாள்!
மு.வரதராசன்
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
பரிமேலழகர்
இதுவும் அது.) உள்ளினேன் என்றேன் - பிரிந்த காலத்து நின்னையிடையின்றி நினைந்தேன் என்னும் கருத்தால், யான் உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள் - என, அதனை ஒருகால் மறந்து பின் நினைந்தேன் என்றதாகக் கருதி, என்னை யிடையே மறந்தீர் என்று சொல்லி, முன் புல்லுதற்கு அமைந்தவள் அஃதொழிந்து புலத்தற்கு அமைந்தாள்.(மற்று - வினை மாற்றின்கண் வந்தது. அருத்தாபத்திவகையான் மறத்தலையுட்கொண்டு புலந்தாள் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.
Meaning in English
'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me not





