Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1313

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.

kOTTuppUs sUTinum kAyum oruttiyaikkATTiya sUTinIr enRu

Sudhakaran Govindaraju

பொருள் / உரை

முருகா எளிய உரை

மரக் கிளையில் மலர்ந்த நறுமணப் பூக்களை நான் மாலையாகச் சூடிக் கொண்டாலும், 'நீர் விரும்பும் வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே இதைச் சூடி வந்தீர்' என்று சொல்லி என் காதலி சினம் கொள்வாள்!

• கோட்டுப்பூச் சூடினும் = மரக் கிளையில் பூத்த மலர்களை மாலையாக நான் சூடிக் கொண்டாலும்;• ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று = 'நீர் விரும்பும் வேறொரு பெண்ணுக்குக் காட்டுவதற்காகவே இதைச் சூடினீர்' என்று சொல்லி;• காயும் = என் காதலி என் மீது சினம் கொள்வாள்!

மு.வரதராசன்

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

பரிமேலழகர்

(தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது? என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது.) கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச்செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப்பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ? ('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர், வளையமாகச் சூடினும் என்பதாம்;'கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்' (புறநா.275)என்றார் பிறரும். இனி, 'அம்மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணிகாட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்', எனினும்அமையும்.)

சாலமன் பாப்பையா

ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.

Meaning in English

I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout