Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1311

இன்பத்துப்பால்கற்பியல்132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.

peNNiyalAr ellArum kaNNiR potuvuNparnaNNEn parattanin mArpu

RANDOM VIEWS

பொருள் / உரை

முருகா எளிய உரை

பல பெண்களையும் நாடும் இயல்புடையவரே! பெண் தன்மை கொண்ட பெண்கள் எல்லாரும் உம்மைத் தம் கண்களால் பொதுப் பொருளாகப் பார்த்து நுகர்கிறார்கள்; ஆதலால் பிற பெண்களின் பார்வையில் பட்ட உமது மார்பை நான் தழுவ மாட்டேன்!

• பரத்த = பல பெண்களையும் நாடும் பரத்தைமை கொண்டவரே;• பெண் இயலார் எல்லாரும் = பெண் தன்மையுடைய பெண்கள் எல்லாரும்;• கண்ணின் பொது உண்பர் = உமது அழகை தம் கண்களாலே பொதுப் பொருளாகப் பார்த்து நுகர்கிறார்கள்;• நின் மார்பு நண்ணேன் = ஆதலால் பிற பெண்கள் பார்வையின் எச்சிலான உமது மார்பை நான் தழுவ மாட்டேன்!

மு.வரதராசன்

பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

பரிமேலழகர்

(உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன். (கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)

சாலமன் பாப்பையா

பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.

Meaning in English

From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embrace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout