Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1302

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.

uppamain taRRAl pulavi atusiRitumikkaRRAl nILa viTal

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலில் கொள்ளும் சிறு ஊடலானது உணவில் சுவை சேர்க்கும் உப்பைப் போன்றது; அந்த ஊடலை அளவோடு நிறுத்தாமல் நீண்ட நேரம் நீட்டிக்க விடுவது உணவில் உப்பு அதிகமாகிக் கெடுத்து விடுவதைப் போன்றதாகும்!

• புலவி = காதலில் கொள்ளும் ஊடலானது;• உப்பு அமைந்தற்று = உணவில் சுவைக்குத் தேவையான உப்பு அளவோடு அமைந்திருப்பதைப் போன்றதாகும்;• அது சிறிது நீள விடல் = அந்த ஊடலை அளவறிந்து முடிக்காமல் சிறிது நீட்டிக்க விடுவதோ,• மிக்கற்று = உணவில் உப்பு அதிகமாகிச் சுவையை அழிப்பதைப் போன்றதாகும்!

மு.வரதராசன்

உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

பரிமேலழகர்

(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)

சாலமன் பாப்பையா

உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

Meaning in English

A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout