Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1301

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.

pullA tirAap pulattai avaruRumallalnOy kANkam siRitu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலரைக் கண்ட உடனே விரைந்து சென்று தழுவாமல் சிறிது விலகி நின்று அவரிடம் ஊடல் கொள்வாயாக! அந்த ஊடலினால் காதலர் அடையக்கூடிய தவிப்பையும் வேதனையையும் நாமும் சிறிது நேரம் பார்த்து மகிழ்வோம்!

• புல்லாது இரா = உடனே சென்று காதலரைத் தழுவாமல் சற்றே விலகியிருந்து;• புலத்தை = அவரிடம் ஊடல் கொள்வாயாக!• அவர் உறும் அல்லல் நோய் = அந்த ஊடலினால் காதலர் அடையக்கூடிய துன்ப வேதனையை,• சிறிது காண்கம் = நாமும் சிறிது நேரம் வேடிக்கை பார்ப்போம்!

மு.வரதராசன்

( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

பரிமேலழகர்

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)

சாலமன் பாப்பையா

நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

Meaning in English

Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout