பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
peRAamai anjsum peRinapiri vanjsumaRAa iTumpaitten nenjsu
Sofia Satish
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலரைப் பெறாத போது அவர் இல்லையே என்று ஏங்கி அஞ்சும்; அவரைப் பெற்று அவரோடு கூடி இருக்கும் போதோ மீண்டும் பிரிந்து சென்று விடுவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் எப்போதுமே தீராத துன்பத்தில் தவிக்கின்றது!
• பெறாமை அஞ்சும் = காதலரைப் பெறாத போது அவர் இல்லையே என்று அஞ்சும்;• பெறின் பிரிவு அஞ்சும் = அவரைப் பெற்று அவரோடு கூடியிருக்கும் போதோ மீண்டும் பிரிந்து விடுவாரோ என்று அஞ்சும்;• என் நெஞ்சு அறா இடும்பைத்து = இதனால் என் நெஞ்சமானது எப்போதும் முடிவில்லாத பெருந்துன்பத்தையே உடையதாக இருக்கின்றது!
மு.வரதராசன்
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
பரிமேலழகர்
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
Meaning in English
I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain





