இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
iniyanna ninnoTu sUzhvAryAr nenjsEtuniseytu tuvvAykAN maRRu
Kavitha Janardhanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சமே! காதலரைக் கண்ட அடுத்த கணமே அவரிடம் ஊடல் கொண்டு பிறகு கூடி மகிழ நீ விரும்புவதில்லை; ஆகையால் இனிமேல் அத்தகைய ஊடல் முறைகளைப் பற்றி உன்னோடு கலந்து ஆலோசிப்பவர் யார்? (யாரும் இல்லை).
• நெஞ்சே = என் நெஞ்சமே!• துனி செய்து மற்றுத் துவ்வாய் = காதலரைக் கண்டதும் அவரிடம் ஊடல் கொண்டு பின்னர் அந்த இன்பத்தை நுகர நீ நினைக்க மாட்டாய்;• இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் = ஆகையால் இனிமேல் அத்தகைய ஊடல் வழிகளை உன்னோடு கலந்து ஆலோசிக்கப் போகிறவர் யார்? (நான் செய்ய மாட்டேன்).
மு.வரதராசன்
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?
பரிமேலழகர்
(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; துனி செய்து மற்றுத் துவ்வாய் - நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் நுகரக் கருதுவதல்லது அவர் தவறு நோக்கி, முன் புலவியை உண்டாக்கி அதனை அளவறிந்து பின் நுகரக் கருதாய்; இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் - ஆகலான், இனி அப்பெற்றிப்பட்டவற்றை நின்னொடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன். (அப்பெற்றிப்பட்டன - புலக்கும் திறங்கள். 'காண' என்பது உரையசை. 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. முன்னெல்லாம் புலப்பதாக எண்ணியிருந்து, பின் புணர்ச்சி விதும்பலின், இவ்வாறு கூறினாள்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.
Meaning in English
'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee my heart





