Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1293

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.

keTTArkku naTTAril enpatO nenjsEnIpeTTAng kavarpin selal

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சமே! துன்பத்தில் இருக்கும் என்னை விட்டுவிட்டு நீ உன் விருப்பப்படியே காதலரைப் பின் தொடர்ந்து செல்வது, 'துன்பத்தால் கெட்டுப் போனவர்களுக்கு உலகில் நண்பர்கள் எவரும் இல்லை' என்ற பழமொழியை மெய்ப்பிக்கத்தானோ?

• நெஞ்சே = என் நெஞ்சமே!• நீ பெட்டாங்கு அவர் பின் செலல் = நீ என்னை விட்டுவிட்டு உன் விருப்பப்படியே காதலர் பின்னால் செல்வது;• கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ = 'துன்பத்தால் அழிந்தவர்களுக்கு உலகில் நண்பர்கள் யாரும் இல்லை' என்ற பழமொழியை மெய்ப்பிக்கவோ?

மு.வரதராசன்

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

பரிமேலழகர்

(இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. ('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது', என்பாள், 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். 'ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு' (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.

சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

Meaning in English

'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost depart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout