அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது.
avarnenj savarkkAtal kaNTum evannenjsEnIyemak kAkA tatu
Abburva Dilip
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலரின் நெஞ்சமானது நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் அவருக்கே துணையாக நிற்பதை நன்றாகப் பார்த்திருந்தும், என் நெஞ்சமே! நீ எனக்குத் துணையாக நிற்காமல் அவரையே நினைத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?
• அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் = காதலரின் நெஞ்சம் நம்மை நினையாமல் அவருக்கே துணையாக இருப்பதைக் கண்டும்;• நெஞ்சே = என் நெஞ்சமே!• நீ எமக்கு ஆகாதது எவன் = நீ எனக்குத் துணையாக நிற்காமல் அவரிடமே செல்வதற்குக் காரணம் என்ன?
மு.வரதராசன்
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?
பரிமேலழகர்
(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?
Meaning in English
You see his heart is his alone O heart, why not be all my own





