தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.
tIyinAR suTTapuN uLLARum ARAtEnAvinAR suTTa vaTu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெருப்பினால் உடலில் ஆன புண்ணுமே!காலப்போக்கிலே உள்ளுக்குள் ஆறிடுமே!கொடிய நாவால் சுட்ட வடுவானதே!மனதிலே ஒருநாளும் ஆறிடாதே!
• தீயினாற் சுட்டபுண் = நெருப்பினால் உடம்பில் சுடப்பட்ட காயமானது• உள்ளாறும் = காலப்போக்கில் உள்ளே ஆறிவிடும்;• நாவினாற் சுட்ட வடு = ஆனால் கொடிய நாவினால் சுட்ட சுடுசொல்லின் வடுவானது• ஆறாதே = உள்ளத்தில் ஒருபோதும் ஆறவே ஆறாது.
மு.வரதராசன்
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
பரிமேலழகர்
தீயினால் சுட்டபுண் உள் ஆறும் - ஒருவனை ஒருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும், மனத்தின்கண், அப்பொழுதே ஆறும்; நாவினால் சுட்ட வடு ஆறாது - அவ்வாறன்றி வெவ்வுரை உடைய நாவினால் சுட்ட வடு அதன் கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது. (ஆறிப்போதலால் தீயினால் சுட்டதனைப் 'புண்' என்றும், ஆறாது கிடத்தலால் நாவினால் சுட்டதனை 'வடு' என்றும் கூறினார். தீயும் வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்கும் ஆயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம். இவை மூன்று பாட்டானும் மொழி அடக்கம் கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
Meaning in English
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never more





