தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.
tinaittuNaiyum UTAmai vENTum panaittuNaiyumkAmam niRaiya varin
Haridas K
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெஞ்சத்தில் காதல் உணர்வானது பனைமரம் போலப் பெரிதாகப் பெருகி வழியும்போது, காதலரோடு தினை தானியத்தின் அளவிற்குக் கூடச் சிறிதும் ஊடல் கொள்ளாமல் விரைந்து கூடி மகிழ வேண்டும்!
• காமம் பனைத்துணையும் நிறைய வரின் = நெஞ்சில் காதல் உணர்வு பனைமரம் போலப் பெரிதாகப் பெருகி வழியும்போது;• தினைத்துணையும் = தினை தானியத்தின் அளவிற்குக் கூட மிகச் சிறிதும்,• ஊடாமை வேண்டும் = காதலரோடு ஊடல் (பிணக்கு) கொள்ளாமல் விரைந்து கூட வேண்டும்!
மு.வரதராசன்
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
Meaning in English
When as palmyra tall, fulness of perfect love we gain, Distrust can find no place small as the millet grain





