செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
seRitoTi seytiRanta kaLLam uRutuyartIrkkum marunton RuTaittu
Sandeep Narayan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெருங்கிய வளையல்களை அணிந்த என் காதலி என்னிடம் ஏதோ ஒரு ரகசியக் குறிப்பைக் காட்டிவிட்டுச் சென்ற செயல், என் நெஞ்சில் எழுந்த பெரும் துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தைத் தன்னுள் கொண்டிருக்கின்றது!
• செறி தொடி = நெருங்கிய வளையல்களை அணிந்த என் காதலி,• செய்து இறந்த கள்ளம் = என்னிடம் ஏதோ ஒரு ரகசியக் குறிப்பைக் காட்டிவிட்டுச் சென்ற செயல்;• உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து = என் நெஞ்சில் எழுந்த பெரும் பிரிவுத் துயரத்தைத் தீர்க்கும் மருந்தாகிய ஒன்றைத் தன்னுள் கொண்டிருக்கின்றது!
மு.வரதராசன்
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
Meaning in English
The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which my raising grief is checked





