முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
mukaimokkuL uLLatu nARRampOl pEtainakaimokkuL uLLaton RuNTu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் = மலரும் அரும்பின் முகிழ்ப்பிற்குள் நறுமணம் மறைந்திருப்பது போல;• பேதை நகை மொக்குள் = என் காதலியின் இதழ்களில் அரும்பும் புன்னகைக்குள்,• உள்ளது ஒன்று உண்டு = மறைந்திருக்கும் ஒரு ரகசியக் குறிப்பு இருக்கின்றது!எளிய விளக்கம்:மலரத் தொடங்கும் பூ அரும்பின் உள்ளே நறுமணம் மறைந்திருப்பது போல, என் இளம் காதலியின் இதழ்களில் அரும்பும் மெல்லிய புன்னகைக்குள் மறைந்திருக்கும் ஒரு ரகசியக் குறிப்பு இருக்கின்றது!
மு.வரதராசன்
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)
சாலமன் பாப்பையா
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
Meaning in English
As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes





