புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்கண்அன்ன கேளிர் விரன்.
pulappEnkol pulluvEn kollO kalappEnkolkaNNanna kELir varin
Nellai K. Kannakrishna
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் கண்மணி போல் சிறந்த காதலர் திரும்பி வரும்போது, நெடுநாள் பிரிந்திருந்தாரே என்று ஊடல் கொள்வேனோ, அன்றி பிரிவுத் துயரால் உடனே அவரைக் கட்டித் தழுவுவேனோ, அல்லது ஊடுதலும் கூடுதல் இரண்டையும் கலந்து செய்வேனோ!
• கண் அன்ன கேளிர் வரின் = என் கண்போல் சிறந்த இனிய காதலர் திரும்பி வரும்போது;• புலப்பேன் கொல் = நெடுநாள் பிரிந்திருந்தாரே என்று ஊடல் கொள்வேனோ?• புல்லுவேன் கொல் = அன்றி பிரிவுத் துயரால் உடனே அவரைக் கட்டித் தழுவுவேனோ?• கலப்பேன் கொல் = அல்லது ஊடுதலும் தழுவுதலுமாகிய இரண்டையும் கலந்து கூடுவேனோ?
மு.வரதராசன்
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
பரிமேலழகர்
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?
Meaning in English
Shall I draw back, or yield myself, or shall both mingled be, When he returns, my spouse, dear as these eyes to me





