வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.
vALaRRup puRkenRa kaNNum avarsenRanALoRRit tEynta viral
Lakshmi Sudha
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலர் என்னைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் குறியிட்டுத் தொட்டுத் தொட்டு எண்ணியதால் என் விரல்கள் தேய்ந்து போயின; அவர் வரும் வழியையே ஓயாமல் பார்த்துப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து மங்கிப் போயின!
• அவர் சென்ற நாள் ஒற்றி = காதலர் என்னைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் குறியிட்டுத் தொட்டுத் தொட்டு எண்ணியதால்,• விரல் தேய்ந்த = என் விரல்கள் தேய்ந்து போயின;• கண்ணும் = அவர் வரும் வழியையே தொடர்ந்து பார்த்துப் பார்த்து,• வாள் அற்றுப் புற்கென்ற = என் கண்களும் ஒளியிழந்து பார்வை மங்கிப் போயின!
மு.வரதராசன்
என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
பரிமேலழகர்
(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)
சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
Meaning in English
My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn





