நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.
nANena onRO aRiyalam kAmattAlpENiyAr peTpa seyin
Rakshanasaisree Nagarajan
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாம் ஆசையோடு விரும்பிய காதலர் திரும்பி வந்து, தன் பெருங்காதலால் நமக்கு விருப்பமான தழுவலையும் அன்பையும் தரும்போது, 'நாணம்' என்று சொல்லப்படும் ஒரு பெண்மைப் பண்பு இருப்பதையே நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம்!
• பேணியார் = நாம் ஆசையோடு விரும்பிய காதலர் திரும்பி வந்து,• காமத்தால் பெட்ப செயின் = தன் காதலால் நமக்கு விருப்பமான தழுவலையும் அன்பையும் தரும்போது;• நாண் என ஒன்று அறியலம் = 'நாணம்' என்று சொல்லப்படும் ஒரு பெண்மைப் பண்பு இருப்பதையே நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம்!
மு.வரதராசன்
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
பரிமேலழகர்
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். ('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)
சாலமன் பாப்பையா
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
Meaning in English
No sense of shame my gladdened mind shall prove, When he returns my longing heart to bless with love





