Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1252

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.

kAmam enavonRO kaNNinRen nenjsattaiyAmattum ALum tozhil

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதல் வேட்கை என்று சொல்லப்படும் இந்த ஒன்றுக்குச் சிறிதும் இரக்கமே இல்லை; ஏனெனில், ஊரார் அனைவரும் தொழிலொழிந்து உறங்கும் நள்ளிரவு நேரத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்துத் தன் ஏவல்படி அலைக்கழித்து ஆட்சி செய்கின்றது!

• காமம் என ஒன்று = காமம் என்று சொல்லப்படும் இந்த உணர்ச்சிக்கு,• கண் இன்று = சிறிதும் இரக்கமே இல்லை;• யாமத்தும் = ஊரார் அனைவரும் உறங்கும் நள்ளிரவு நேரத்திலும்,• என் நெஞ்சத்தை தொழில் ஆளும் = என் நெஞ்சத்தைத் தண்டித்துத் தன் ஏவல்படி அலைக்கழித்து ஆட்சி செய்கின்றது!

மு.வரதராசன்

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

பரிமேலழகர்

(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

Meaning in English

What men call love is the one thing of merciless power; It gives my soul no rest, e'en in the midnight hour

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout