காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
kAmak kaNissi uTaikkum niRaiyennumnANuttAzh vIzhtta katavu
Baskar Mathivathani kuralil kural
பொருள் / உரை
முருகா எளிய உரை
நாணம் என்னும் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்ட மன அடக்கம் (நிறை) என்னும் உறுதியான கதவை, என்னுள் பொங்கி எழும் காதல் வேட்கை என்னும் கைக்கோடரி சுக்குநூறாக உடைத்து எறிகின்றதே!
• நாணுத் தாழ் வீழ்த்த = நாணம் என்னும் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டப்பட்ட,• நிறை என்னும் கதவு = மன அடக்கம் (கற்பு நிறை) என்னும் உறுதியான கதவை;• காமக் கணிச்சி உடைக்கும் = என்னுள் பொங்கி எழும் காம வேட்கை என்னும் கைக்கோடரி உடைத்து எறிகின்றதே!
மு.வரதராசன்
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.
பரிமேலழகர்
(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)
சாலமன் பாப்பையா
நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!
Meaning in English
Of womanly reserve love's axe breaks through the door, Barred by the bolt of shame before





