Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1246

இன்பத்துப்பால்கற்பியல்125. நெஞ்சொடுகிளத்தல்

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

kalantuNarttum kAtalark kaNTAR pulantuNarAypoykkAyvu kAytiyen nenjsu

Harshini Vaanan

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சமே! தழுவித் தன் அன்பைக் காட்டி ஊடலை நீக்கவல்ல காதலரைக் கண்ட உடனேயே அவரிடம் சினந்து நிற்காமல் சரணடைந்துவிடும் நீ, இப்போது அவர் இல்லாத நேரத்தில் மட்டும் அவரைப் 'பொல்லாதவர்' என்று வீணாகப் பொய்க்கோபம் கொள்கின்றாய்!

• என் நெஞ்சு = என் நெஞ்சே!• கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால் = தழுவித் தன் அன்பைக் காட்டி ஊடலை நீக்கவல்ல காதலரைக் கண்ட உடனேயே,• புலந்து உணராய் = அவரிடம் ஊடி நிற்காமல் உடனே சரணடைந்துவிடுகிறாய்;• பொய்க்காய்வு காய்தி = இப்போது அவர் இல்லாத நேரத்தில் மட்டும் அவரைப் 'பொல்லாதவர்' என்று வீணாகப் பொய்க்கோபம் கொள்கின்றாய்!

மு.வரதராசன்

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

பரிமேலழகர்

(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

Meaning in English

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout