Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1244

இன்பத்துப்பால்கற்பியல்125. நெஞ்சொடுகிளத்தல்

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று.

kaNNum koLassERi nenjsE ivaiyennaittinnum avarkkANal uRRu

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சமே! நீ காதலரைக் காண அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு போவாயாக; இல்லாவிட்டால், அவரைக் காண வேண்டும் என்ற பேராவலினால் இந்தக் கண்கள் என்னையே பிடுங்கித் தின்பது போல் பெருந்துன்பம் தருகின்றன!

• நெஞ்சே = என் நெஞ்சமே!• கண்ணும் கொளச் சேறி = நீ காதலரைக் காண அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உன்னுடன் கூட்டிக்கொண்டு போவாயாக;• இவை அவர்க்காணல் உற்று = இல்லாவிட்டால், காதலரைக் காண வேண்டும் என்ற பேராவலினால்,• என்னைத் தின்னும் = இந்தக் கண்கள் என்னையே பிடுங்கித் தின்பது போல் வாட்டுகின்றன!

மு.வரதராசன்

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும். ('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.)

சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

Meaning in English

O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout