கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு.
kaNNin pasappO paruvaral eytinREoNNutal seytatu kaNTu
Tharaniya Sivarajah
பொருள் / உரை
முருகா எளிய உரை
(தலைவன் வியப்பது) தழுவல் சற்றே தளர்த்தப்பட்ட உடனேயே காதலியின் நெற்றி பசலை அடைந்த அதிவேகத்தைக் கண்டு, 'நாம் காற்று நுழைந்த பிறகே பசலை பூத்தோமே' என்று அவளது கண்களின் பசலையே நாணித் துன்பம் அடைந்துவிட்டது; உறுப்புகளும் ஒன்றையொன்று விஞ்சிப் பசலை கொள்ளும் பேரன்பு கொண்டவள் அவள்!
• ஒள் நுதல் செய்தது கண்டு = தழுவல் தளர்த்தப்பட்ட உடனேயே ஒளிபொருந்திய நெற்றி பசலை அடைந்த விரைவைக் கண்டு;• கண்ணின் பசப்பு பருவரல் எய்தின்று = 'நாம் சற்றுத் தாமதமாகப் பசலை அடைந்தோமே' என்று எண்ணி அவளது கண்களின் பசலையே வெட்கப்பட்டுத் துன்பம் அடைந்துவிட்டது!
மு.வரதராசன்
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)
சாலமன் பாப்பையா
குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!
Meaning in English
The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright brow





