முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.
muyangkiya kaikaLai Ukkap pasantatupaintoTip pEtai nutal
Vaishnavi Ramkumar
பொருள் / உரை
முருகா எளிய உரை
(பிரிந்து சென்ற தலைவன் தலைவியின் மென்மையை நினைப்பது) இறுகத் தழுவியிருந்த என் கைகளை அவளுக்கு வலிக்குமோ என்று கருதிச் சிறிதே தளர்த்திய உடனேயே, அந்தச் சிறு பிரிவையும் தாங்க முடியாமல் என் காதலியின் அழகிய நெற்றி ஒளியிழந்து பசலை பூத்துவிட்டதே; இப்போது இத்தனை நீண்ட பிரிவை அவள் எப்படித் தாங்குவாளோ?
• முயங்கிய கைகளை ஊக்க = இறுகத் தழுவியிருந்த என் கைகளை அவளுக்கு வலிக்குமோ என்று கருதிச் சிறிதே தளர்த்திய உடனேயே;• பைந்தொடி பேதை நுதல் பசந்தது = அந்தச் சிறு பிரிவையும் தாங்க முடியாமல், பசும்பொன் வளையல் அணிந்த என் காதலியின் நெற்றி ஒளியிழந்து பசலை பூத்துவிட்டது!
மு.வரதராசன்
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
பரிமேலழகர்
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!
Meaning in English
One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet decked





